கஞ்சா கடத்திய 2 டிரைவர்கள், போட்டோகிராபர் கைது..!

கோவை : மேட்டுப்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்செல்வநாயகம் நேற்று மேட்டுப்பாளையம்- சிறுமுகை ரோட்டில் உள்ள மதீனா நகர் சந்திப்பில் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் மொத்தம் 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையம் மேதர் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த மாதேஷ் (வயது 35) பாலக்காடு மனப்படம் பகுதியைச் சேர்ந்த சிஜி என்ற ராஜு (வயது 37) என்பது தெரிய வந்தது. இருவரும் லாரி டிரைவர்களாக வேலை பார்த்து வந்ததனர்.இந்த கஞ்சாவை ரயில் மூலம் ஆந்திராவில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்டுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதே போல கே ஜி சாவடி போலீசார் வேலாந்தவளம் கே.ஜி .சாவடி ரோட்டில் சோதனை நடத்தினார்கள். அங்குள்ள குமிட்டிபதி பிரிவு அருகே சந்தேகப்படும் படி நடந்து வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர் . அவரிடம் 1,100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பக்கம் உள்ள பொன்னாகரத்தைச் சேர்ந்த அருண் பிரசாத் ( வயது 29 )என்பது தெரியவந்தது. இவர் போட்டோகிராபராக வேலை பார்த்து வந்தார். இந்த கஞ்சாவை ஒடிசா மாநிலத்தில் இருந்து கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவரிடம் விசாரணை நடந்து வருகிறது..