பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் வளர்ப்புக்காக விடப்பட்ட 2.90 லட்சம் மீன் குஞ்சுகள்.!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு மீன்கள் நன்கு வளர்ந்த உடன் பிடிக்கப்பட்டு தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் விற்பனை நிலையங்களில் நுகர்வோருக்கு  விற்பனை செய்யப்படுகிறது.  தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின்  ஆழியாறு மேலாளர் சுகுமார் தலைமையில் பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் மீன் குஞ்சுகள் விடும் பணி நடைபெற்றது. மீன் துறை சார்பில் வளர்க்கப்பட்ட கட்லா இனத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் மீன் குஞ்சுகளும்,  ரோகு இனத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் மீன் குஞ்சுகளும் என மொத்தம் 2.90 லட்சம் மீன் குஞ்சுகள் பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் விடப்பட்டது. தற்போது விடப்பட்ட மீன் குஞ்சுகள் 60 நாட்களில் நன்கு வளர்ந்த உடன் மீனவர்கள் மூலம் பிடிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், ஆண்டொன்றுக்கு பவானிசாகர் அணையில் 39 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்படுவதாகவும், தற்போது இந்த ஆண்டு இதுவரையிலும் 5 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதாகவும் மீன் வளர்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் பவானிசாகர் துணை மேலாளர் ராஜன், மீன் துறை துணை இயக்குனர் தில்லை ராஜன், உதவி இயக்குனர் கதிரேசன் ஆய்வாளர் முகமத் பானு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்..