உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து மருத்துவம் படிக்க சென்ற மாணவர்கள் பலர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். இவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோவை மாணவி
கோவை சூலூரை சேர்ந்தவர் ரஞ்சனி(வயது22). இவர் உக்ரைனில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5&ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் உள்பட 40 பேர் அங்கு படித்து வருகிறார்கள். போர் நடைபெற்று வருவதால், பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்தனர். மாணவி உள்பட அனைவரையும், இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என அவர்கள் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் கோவை மாணவி ரஞ்சனி உள்பட 40 தமிழக மாணவிகள் என மொத்தம் 250 இந்தியர்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி பஸ் மூலமாக ருமேனியா நாட்டுக்கு சென்றனர். அவர்கள் அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா வர உள்ளனர்.
இதுகுறித்து கோவை மாணவி ரஞ்சனி கூறியதாவது:&
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கிய தகவல் கிடைத்ததும், நான் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 40 மாணவிகள் பாதுகாப்பான இடங்களில் தங்கி இருந்தோம். எங்களுடன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் உடன் இருந்தனர். எங்களை மீட்க அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.
பஸ்சில் ருமேனியா சென்றனர்
தற்போது மத்திய அரசு, இந்தியர்களை, உக்ரைனில் இருந்து அருகே உள்ள நாடுகளுக்கு வரவழைத்து இந்தியாவிற்கு அழைத்து வருகிறது. நாங்களும் இங்கிருந்து புறப்பட்டு அண்டை நாட்டுக்கு செல்ல முடிவு செய்தோம். இதுகுறித்து இந்திய தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்தோம். அவர்கள் ருமேனியா நாட்டிற்கு வருமாறு கூறினர்.
இதையடுத்து நான் உள்பட 40 தமிழக மாணவிகள் என மொத்தம் 250 இந்தியர்களும் நேற்று இரவு 8.30 மணியளவிவல் நாங்கள் தங்கியிருந்த வினிட்சியா பகுதியில் இருந்து ருமேனியாவுக்கு 6 பஸ்களில் புறப்பட்டோம்.
இரவில் பிரச்சினைக்குரிய பகுதிகள் அனைத்தையும் கடந்து வந்து விட்டோம். வினிட் சியாவில் இருந்து உக்ரைன் எல்லைப்பகுதியான செங்கிஸ்கிக்கு 6 மணி நேரத்தில் வந்து விடலாம். போர் காரணமாக மக்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறி வருவதால் சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
வாகன நெரிசல்
இதனால் 12 மணி நேர பயணத்திற்கு பிறகு இன்று காலை 8 மணிக்கு தான் உக்ரைனின் எல்லைப் பகுதியான செங்கிஸ்கியை அடைந்துள்ளோம்.
இன்னும் 3 முதல் 4 மணி நேர பயணத்தில்மால்டோவா வழியாக ருமேனியா எல்லைப் பகுதியை அடைந்து விடுவோம். நாங்கள் ஏற்கனவே இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவித்து விட்டதால் அவர்கள் அங்கு தயாராக இருப்பதாக கூறினர்.
15 கி.மீட்டர் நடை பயணம்
உக்ரைனை விட்டு அதிகளவில் மக்கள் வெளியேறி கொண்டிருப்பதால் ருமேனியா எல்லைப் பகுதியில் உள்ள சாலைகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் மற்றும் வாகனங்களாகவே உள்ளது. இதனால் ருமேனியா எல்லையிலேயே எங்களை இறக்கி விட்டு விடுவார்கள். அங்கிருந்து நாங்கள் 15 கிலோ மீட்டர் தூரம் நடந்து ருமேனியாவுக்குள் செல்ல வேண்டும்.
நாங்கள் ருமேனியாவுக்குள் சென்றதும், இந்திய தூதரக அதிகாரிகள் எங்களை வாகனம் மூலம் ருமேனியா தலைநகரில் விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட உள்ளோம். அங்கிருந்து இந்தியாவுக்கு இயக்கப்படும் விமானத்தில் நாங்கள் நாட்டிற்கு திரும்பி வர இருக்கிறோம். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்கனவே தூதரகம் செய்து விட்டது.
இதனால் இன்று விமானத்தில் புறப்பட்டு விடுவோம் என எதிர்பார் க்கிறோம்.எங்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இவர்களை தவிர உக்ரைனின் தலைநகரான கீவ்வில் இருந்து 40 மாணவர்கள் ரெயில் மூலமாக ருமேனியாவுக்கு வந்து கொண்டிருப்பதாக மாணவி தெரிவித்தார்.
Leave a Reply