பதுக்கி வைத்திருந்த 1270 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்- வடமாநில வாலிபர் கைது..!

கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக சூலூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவுசப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான சூலூர் கண்ணம்பாளையம் பகுதிக்கு விரைந்து சென்று பள்ளபாளையம் – பாப்பம்பட்டி ரோட்டில் உள்ள ஒட்டல் முன்நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை சோதனை செய்தனர். அப்போது கல்லூரி மாணவர்களுக்கு விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் சிங்(வயது 36)என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 6 1/2 கிலோ எடையுள்ள 32 பாக்கெட்டுகளில் இருந்த 1270 கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இளம் சமுதாயத்தினர் தற்செயலாகவோ, தவறுதலாகவோ போதைப் பொருள்களை பயன்படுத்தி அதற்கு முழுமையாக அடிமையாகி விடுகிறார்கள். போதையின் பாதையில் சென்றால் தனது வாழ்க்கையின் பாதையே மாறி விடுகிறது” என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.இது போன்ற போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க அஞ்ச வேண்டாம் என்றும், தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்..