மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்ததில் 11 பேர் பலி: 38 பேர் காயம் – நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே..!

காராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்ததில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 38 பேர் படுகாயம் அடைந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இன்று அதிகாலை பேருந்து ஒன்று தீப்பிடித்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 38 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாசிக்கில் உள்ள அவுரங்காபாத் சாலையில் டீசல் ஏற்றிச் சென்ற டிரெய்லர் லாரி மீது மோதியதில் பேருந்து தீப்பிடித்து விபத்துள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலானோர் பேருந்தில் ஸ்லீப்பர் கோச்சில் பயணம் செய்தவர்கள். மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று நாசிக் காவல்துறை துணை ஆணையர் அமோல் தம்பே தெரிவித்துள்ளார்.

தீ விபத்துக்கான சரியான காரணத்தை அறிய வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அதிகாலை 5.15 மணியளவில் நடந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர், பின்னர் அவர்கள் காவல்துறை மற்றும் ஆம்புலன்சை தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த பேருந்து தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்த பிரதமர் மோடி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் PMNRF-ல் இருந்து நிதியுதவி வழங்கப்படும் அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவை மகாராஷ்டிர அரசே ஏற்கும் என அம்மாநில அமைச்சர் தாதா பூஸ் தெரிவித்துள்ளார்.