இந்தியாவைக் காப்பாற்றுவதற்குத் தயாராக இருப்பீர் – சென்னையில் முதல்வர் ஸ்டாலின் உரை..!

இந்தியாவைக் காப்பாற்றுவதற்குத் தயாராக இருப்பீர்” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று உரையாற்றியுள்ளார்…

இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற திமுக விவசாய அணியின் துணைச் செயலாளர் ந.நல்லசேதுபதி இல்லத் திருமண விழா நடந்தது. இதில் கலந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் மேடையில் உரையாற்றும் போது, 1967-க்கு பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பேரறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்று சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்கிற தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றி தந்தார் என சுட்டிக்காட்டிய அவர் இது சீர்திருத்த திருமணம் மட்டுமல்ல, சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கும் திருமணம் என கூறினார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, திமுக சார்பில் 2024-இல் வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆங்காங்கே பூத் கமிட்டிகளை அமைக்க வேண்டும் என்று ஒரு இலக்கு வைத்திருப்பதாக கூறிய அவர் அந்த இலக்கை நாம் நிறைவேற்றினால்தான் இந்த நாட்டை நாம் காப்பாற்ற முடியும் எனக் கூறினார்.

மாநிலத்தில் ஆட்சிக்கு வந்து 3-ஆம் ஆண்டை தொடங்கவிருப்பதாக தெரிவித்த அவர் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை கொடுமையான நிதிநிலை பற்றாக்குறை இருந்தாலும் நிறைவேற்றி வருவதாகவும் அதனால் இன்றைக்கு இந்தியாவிலேயே ஒரு சிறந்த மாநிலமாக வளர்ந்து வந்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்களுடைய முன்னேற்றத்திற்கு பல திட்டங்களைத் தீட்டி கொண்டிருந்தாலும், அதே நேரத்தில் மாநில உரிமைகளை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது எனவும் மாநில உரிமைக்கு நாம் போராட வேண்டும் எனவும் பேசியுள்ளார்.

தொடர்ந்து, 2024-இல் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் அந்த தேர்தலில் முழுமையாக அகில இந்திய அளவில் வெற்றி பெற்றால்தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும் என்ற ஒரு சூழ்நிலை உருவாகியிருப்பதாகவும் கூறினார். மேலும், 2024-ஆம் ஆண்டு வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நம்முடைய அணிக்கு நீங்கள் ஏற்படுத்தித் தருவதற்கு துணை நில்லுங்கள் தொண்டர்களை கேட்டுக்கொண்டார்.