சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது…

திருப்பதி: சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை ரூ.1,530 கோடியில் செயல்படுத்த டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் திருப்பதிக்கு வாகனங்களில் செல்லும் பக்தர்கள் எளிதாக போக்குவரத்து நெரிசல் இன்றி விரைவாக பயணம் செய்யலாம். ஆந்திர மாநிலத்தின் முக்கிய வழிபாட்டு தலங்களில் ஒன்று திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில். உலக அளவில் பணக்கார கோவில்களில் ஒன்றாக உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு கிட்டதட்ட ஒரு லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்கின்றனர். சாதாரண ஏழைமக்கள் நாள் கணக்கில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். அதே நேரத்தில் விஐபிக்கள் அதற்கென உரிய தரிசன நேரத்தில் ஏழுமலையானை சிறப்பு தரிசன முறையில் வழிபடுகின்றனர். திருப்பதிக்கு வருபவர்கள் சுற்றியுள் கோவில்களுக்கும் சென்று வருவது வழக்கம்.

திருப்பதி திருமலை மட்டுமின்றி திருப்பதி மாவட்டத்தில் ஏராளமான கோவில்களும் உள்ளனர். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோவிந்தராஜ சுவாவி கோவில், சீனிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேசுவர கோவில், அப்பலயகுண்டம் பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் உள்ளன. இதோபோல் ஆகாச கங்கா, தலகோனா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல சுற்றுலா தலங்கள் உள்ளன. இதேபோல் காளஹஸ்தியில் உள்ள சிவன் கோயிலுக்கும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதிக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலான பக்தர்கள் காளஹஸ்திக்கும் சென்றுவிட்டுதான் வருவார்கள். ஆனால் இங்கு சாலை வசதி சரியான முறையில் இல்லை என பல ஆண்டுகளாக பக்தர்கள் குமுறி வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னையிலிருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் ஆந்திரா-சென்னைஇடையே விமான நிலையங்கள், துறைமுகத்துக்கு அதிகளவில் வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் இந்தத் தடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து இந்த சாலையை விரிவாக்கம் செய்யமுடிவு செய்யப்பட்டது. திருப்பதியிலிருந்து சென்னை மார்க்கத்தில் உள்ள ரேணிகுண்டாவை அடுத்துள்ள காஜுல மான்யம் வரை ஏற்கெனவே 4 வழிச்சாலை உள்ளது. ஆதலால், இங்குள்ள கல்லூர் கூட்டுச்சாலை பகுதியிலிருந்து, புத்தூர், நகரி, திருத்தணி வழியாக திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வரை இந்த சாலையை அகலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆந்திராவில் 37 கிலோமீட்டர் தூரமும், தமிழகத்தில் 43 கிலோமீட்டர் தூரமும் 4 வழிச்சாலையிலிருந்து 6 வழிச்சாலையாக இது விஸ்தரிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை ரூ.1,530 கோடியில் செயல்படுத்த டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆறு வழிச்சாலை பயன்பாட்டுக்கு வரும் போது போக்குவரத்து நெரிசல் குறையும் சென்னையில் இருந்து ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் எளிதாகவும் விரைவாகவும் செல்லலாம்.