அமைச்சர் சிவசங்கர் உறுதி: அரசின் நிதிநிலை சீரான பின்னர் போக்குவரத்து தொழிலாளர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்…

விழுப்புரம்: அரசின் நிதிநிலை சீரான பின்னர் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சூழலில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தில் அனைத்துப் பேருந்துகளும் இயங்கி வருகின்றன. பொங்கல் வரை வேலைநிறுத்தம் நீடித்தாலும், போக்குவரத்து பாதிக்கப்படக் கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பொங்கலை முன்னிட்டு நிச்சயம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

தொழிலாளர்களின் 6 கோரிக்கைகளில், 2 கோரிக்கைகளுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது. மேலும் 2 கோரிக்கைகளை ஏற்க அரசுஒப்புக்கொண்டுள்ளது. மற்ற கோரிக்கைகளுக்கு குறிப்பிட்ட காலஅவகாசமாவது கொடுத்து, வேலைநிறுத்தத்தைக் கைவிட்டிருக்க வேண்டும். ஆனால், விடாப்பிடியாக தங்கள் கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். அரசின் நிதி நிலைமையில் அவற்றை தற்போது நிறைவேற்றுவது சிரமம் என்பதால், இப்போதைக்கு தீர்வுகாண முடியாது என்று கூறியதை ஏற்காமல், போராடி வருகின்றனர். அவர்களின்உரிமையைப் பெற போராடுகிறார்கள். அதேநேரத்தில், மக்களுக்கான போக்குவரத்தை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை. தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். காலி பணியிடங்களுக்கான நேர்காணல் பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறும். தேவைக்கேற்ப தற்காலிக ஓட்டுநர்கள் பயன்படுத்தப்படுவார்கள். கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்படாத 5 சதவீத ஊதிய உயர்வு,இந்த ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, 20 சதவீததீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும். தொழிலாளர்களின் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்றுயாரும் கூறவில்லை. தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானதுதான். சென்னை, நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தர வேண்டிய சூழலில், அரசின் நிதிநிலை சீரானபின்னர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அமைச்சர்கூறினார். சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி, அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ராஜ்மோகன் உடனிருந்தனர்.