உதகை – மேட்டுப்பாளையம்: இன்று முதல் ஊட்டி மலை ரயில் மீண்டும் தொடக்கம்…

நீலகிரி மாவட்டத்தில் உதகை குன்னூர் கோத்தகிரி பகுதிகளில் ஜனவரி 8ம் தேதி முதல் தொடர் மழை பெய்து வந்தது. குறிப்பாக பர்லியார் மலை பகுதியில் கன மழை பெய்ததால் தண்டவாளத்தில் ஆங்காங்கே மரங்கள் விழுந்தன. பல இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டது. இதனையடுத்து ஜனவரி 9ம் தேதி மலை ரயில் சேவை பாதிக்கபட்டது.மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையிலான தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள பதிப்புகளை சீரமைக்கும் பணி தொடங்கியது. இதனையடுத்து உதகை – மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் சேவை ஜனவரி 11 வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட உதகை மலை ரயில் போக்குவரத்து 2 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கப்பட்டது; 150க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகையை நோக்கி மலை ரயில் புறப்பட்டது.இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.