அண்ணாமலை பாதயாத்திரையை முடிக்க பாஜக தலைமை அதிரடி உத்தரவு? …

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படவுள்ளது. எனவே தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இரண்டு முறை மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பாஜக 3வது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய திட்டம் தீட்டியுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து வெற்ற பெற வேண்டிய தொகுதிகளை இலக்காக வைத்துள்ளது. இதே போல பாஜகவிற்கு போட்டியாக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது. இந்தியா என்ற கூட்டணியை துவக்கியுள்ளது. இந்த கூட்டணி சார்பாக தேர்தலை ஒன்றிணைந்து சந்திக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. எனவே தேர்தல் பணியை இன்னும் வேகமாக பாஜக மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். இந்த பாதயாத்திரை கடந்த ஆண்டு ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கப்பட்டது. தினந்தோறும் இரண்டு தொகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அண்ணாமலை, அந்த பகுதியில் உள்ள முக்கிய பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து வருகிறார். மேலும் கடந்த 9 ஆண்டு கால பாஜக அரசின் சாதனைகளையும் மக்கள் மத்தியில் எடுத்துரைத்து வருகிறார். இந்தநிலையில் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இன்னும் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்காத நிலையில் பாஜக உள்ளது. எனவே பாஜக பாதயாத்திரையை விரைந்து முடிக்க தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழக்தில் அதிமுகவோடு பாஜக கூட்டணியை அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த கூட்டணி முறிந்துள்ளது. எனவே புதிய வலுவான கூட்டணியை அமைக்க வேண்டிய நிலையில் பாஜக உள்ளது. இது போன்ற பல முக்கிய தேர்தல் பணிகள் உள்ளதால் அண்ணாமலையின் பாதயாத்திரையை பிப்ரவரி முதல் வாரத்தில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தினந்தோறும் இரண்டு தொகுதிகளில் பாதயாத்திரையை மேற்கொள்ளும் அண்ணாமலை இனி 3 முதல் 4 தொகுதிகளில் பாதயாத்திரை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.