கோவையில் ஜி.டி. நாயுடு பெயர் பலகை அழிப்பு…

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் கோவை ஜன 19இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஜி. டி. நாயுடு என்ற வழிகாட்டும் பெயர் பலகை அமைந்துள்ளது. இதை அந்தப் பகுதியை சார்ந்த திமுக பிரமுகர் ரகுநாதன் என்பவர் ஜி டி நாயுடு என்ற பெயர் பலகையில் நாயுடு என்ற வார்த்தையை மை பூசி அழித்துள்ளார். இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட கொங்கு மண்டலத்திற்கு பெருமை சேர்த்தவர் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு, அவருடைய பெருமையை அழிக்கும் வகையில் செயல்பட்டுள்ள ரகுநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாநகராட்சி நிர்வாகத்தால் வைக்கப்பட்ட பெயர் பலகையை அழிப்பதற்கு இவருக்கு என்ன உரிமை உள்ளது? வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை? அவர் மீது வழக்கு பதிவு செய்திருந்தாலும் கூட மொழி ரீதியாக இனரீதியாக சாதி ரீதியாக மக்களை பிளவுபடுத்தி சமூக பதற்றத்தை தூண்ட நினைத்த இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் இவர் திமுக பிரமுகர் என்பதால் விட்டுவிட்டதோ ?என சந்தேகம் தோன்றுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இருந்தவர் இப்பொழுது திமுகவில் ஐக்கியமாகி தேவையில்லாத சர்ச்சைகளை கிளப்புகிறார். திராவிட மாடலை எதிர்த்து கேள்வி கேட்டால் வழக்கு போடும் அரசு இவரின் கருத்தை வரவேற்கிறதா? சாதி, மொழி துவேசத்தை தூண்டும் இவரைப் போன்ற நபர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் இவரைப் போன்ற நபர்களை கட்சியில் இருந்து நீக்கி அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த செயலுக்கு முழுப் பொறுப்பேற்று தமிழக முதல்வர் மக்களிடமும் ஜிடி நாயுடு குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது…இவ்வாறு அதில் கூறியுள்ளார்.