இந்திய வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் கோடை காலம் நிலவும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என எச்சரித்திருக்கிறது. இந்தியாவின் கிழக்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் சில இடங்களில் மட்டும் வெப்பம் குறைவாக இருக்கலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது. இந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தியாவின் தென் பகுதி, மத்திய இந்தியா, கிழக்கிந்தியா, வடமேற்கு இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகமான வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் முக்கிய மாவட்டங்களில் திருச்சி ஒன்றாகும். திருச்சியை பொறுத்தவரை தமிழ்நாட்டின் மையப் பகுதியாக விளங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக வெயிலின் தாக்கம் எதிர்பாக்காத அளவிற்கு இந்த ஆண்டு வெப்ப காற்று அலை வீசுவதால் செய்வதறியாமல் தவிக்கும் மக்கள். வெயிலின் தாக்கத்தை கண்டாலே உயிர் பயம் ஏற்படுவதாக திருச்சி மக்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பி செல்வது மிகவும் அரிதாக உள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் உயிர் பயத்தில் அச்சத்துடன் வீட்டில் முடங்கி இருக்கிறோம் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
திருச்சியில் 127 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரித்த வெப்பநிலை
திருச்சியிலும் இந்த ஆண்டு வழக்கத்தைவிட 3 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக 43.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 1896 ஆம் ஆண்டுக்குப் பின்னர் திருச்சியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும். 1896 ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி 43.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது. 127 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று பதிவான 43.1 டிகிரி செல்ஷியஸ் என்பதே திருச்சியின் காலநிலை வரலாற்றில் பதிவான இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையாகும். இதற்கு முன்னர் 1888 ஆம் ஆண்டில் மட்டும் இதே அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.
முன்னதாக, 2013 ஆம் ஆண்டு மே, 18 ஆம் தேதி 42.9 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளிலும் 42 டிகிரி செல்ஷியஸுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பருவநிலை மாற்றத்திற்கு காரணம் பொதுமக்களே
இந்தியாவில் தற்போது வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பொது மக்களாகிய நாம் அனைவரும் தான். இயற்கை வளங்களை பாதுகாக்க நாம் அனைவரும் தவறிவிட்டோம், விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்பனை செய்து மரங்கள் ,செடிகள் ,இயற்கை வளங்களை முழுமையாக நாம் அளித்து விட்டோம். என்று மக்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தங்களிடமிருந்த விவசாய நிலங்களையும், மரங்களையும் வேரோடு சாய்த்தார்களோ அன்றே பருவநிலை மாற்றம் தொடங்கிவிட்டது. இயற்கைக்கு நாம் அனைவரும் செய்த துரோகத்தின் வெளிப்பாடு தான் இந்த வெயிலின் தாக்கம் அதிகரிப்பு. இதோடு இந்த பாதிப்பு நிற்கப் போவதில்லை, வருகின்ற ஒவ்வொரு மாதங்களுக்கும் நாம் எதிர்பாராத பருவ நிலை மாற்றம் ஏற்படும். அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் நம் அனைவரையுமே சேரும் ,இவை அனைத்திற்கும் முக்கிய காரணம் இயற்கை வளங்களை நாம் அளித்ததே ஆகும். இனியாவது இயற்கை வளங்களை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply