கரகாட்டம், குதிரை ஆட்டம்… ராமநாதபுரம் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு..!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.

நேற்று மதுரை வந்த அவர் இன்று காலை ராமநாதபுரம் நோக்கி புறப்பட்டார். மாவட்ட எல்லையான பார்த்திபனூர் முதல் ராமநாதபுரம் வரை சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு தி.மு.க.-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் நகருக்குள் நேற்று  மதியம் 1 மணிக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மதுரை முதல் ராமநாதபுரம் வரை ஆங்காங்கே மேடைகள் அமைக்கப்பட்டு வாத்தியங்களும், பறை, முரசு மற்றும் ட்ரம்ஸ்-களும் முழங்கின.

ராமநாதபுரம் நகரின் பல இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த மேடைகளில் கரகாட்டம் குழுவினர் மற்றும் நடன நாட்டிய குழுவினர் ஆட்டம் போட்டனர். அதைத் திரளாக குவிந்த பொதுமக்களும் தி.மு.க தொண்டர்களும் ஆரவாரம் செய்து கண்டுகளித்தனர். இதேபோல், நகரின் நெடுஞ்சாலைகளில் குதிரைகள் ஆட்டம் போட்டன. இதன்பின்னர் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் தங்கும் விடுதிக்கு செல்கிறார். மாலை 4 மணிக்கு ராமநாதபுரம் அருகே தேவிபட்டணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேராவூர் நடைபெறும் தென் மண்டல அளவிலான தி.மு.க வாக்குச் சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர் , திருநெல்வேலி, தென்காசி , தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கிறார்கள்.

தொடர்ந்து ராமேஸ்வரம் சென்று அங்கு தனியார் விடுதியில் தங்கும் அவர்,  வெள்ளிக்கிழமை மண்டபம் கலோனியர் பங்களா அருகில் நடக்கும் மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவார்.