ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானம்: இந்தியாவிடம் தஞ்சமடைந்த ரஷ்யா!

கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய பிராந்தியங்கள் சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் அறிவித்திருந்தார்.

இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. ரஷ்யாவின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அவசர கூட்டத்தை நடத்தும்படி, அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் கோரிக்கை விடுத்தன.

இதனை தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் உலக நாடுகள் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்தன. நேற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், உக்ரைனில் பதற்றத்தை தணிக்க வேண்டும் என பல்வேறு நாடுகள் தெரிவித்தன. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கொண்டு வரும் தீர்மானம் மீது ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், ரஷ்யாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என இந்திய அரசுக்கு ரஷ்ய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த தீர்மானம் பற்றி டெல்லியில் உள்ள மூத்த ரஷ்ய தூதர் பாபுஷ்கின் கூறுகையில்,

“எங்கள் இந்திய கூட்டாளிகள் ரஷ்யாவை ஆதரிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் எப்படி இறுதி வடிவம் பெறுகிறது என்பதைப் பொறுத்து, இந்தியா தனது நிலைப்பாட்டை முடிவு செய்யும் என வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் ஷிரிங்லா நேற்று தெரிவித்தார்.

வரைவு தீர்மானத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.