வாவ்.. சூப்பர்!! வீதிக்கு வீதி நூலகம்.. கோவை காவல்துறை ஆணையரின் லைப்ரரி ஐடியா-.காக்கிச்சட்டைக்குள் ஒரு எழுத்தாளர் பாருங்களேன்.!!

சென்னை: வீட்டுக்கு ஒரு நூலகம் என்பதே தமிழ்நாட்டில் நடக்காத காரியம். ஆனால் வீதிக்கு ஒரு நூலகம் எனக் கோவை முழுக்க 100 நூலகங்களை நிறுவ உள்ளார் கோவை காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன்.

ஆம். அப்படி ஒரு கனவுடன் தனது பயணத்தைத் தொடங்கி இருக்கும் பாலகிருஷ்ணனிடம் பேசினோம்.

“சின்ன வயசுல இருந்தே நிறையப் புத்தகங்கள் படிப்பேன். அம்புலி மாமா கதைகள், காமிக்ஸ் கதைகள் என்று நிறையப் படிப்பேன். அதுக்குப் பக்கபலமாக இருந்தார் தாத்தா. அவர்கிட்ட இருந்துதான் படிக்கிற பழக்கம் என்னைத் தொற்றிக் கொண்டது” எனக் கூறும் இந்தக் காக்கிச்சட்டைக்காரருக்குள் ஒரு எழுத்தாளரும் இருக்கிறார்.

பொதுவா லைப்ரரிக்கும் காவல்துறைக்கும் என்ன சம்பந்தமென்று பலர் யோசிக்கிறார்கள். குற்றச்செயல்களுக்கு அடிப்படையே மனசுதான். ஒருவர் மனரீதியாக பாதிக்கப்படும் போதுதான் குற்றம் செய்கிறார். வளர்ந்த பிறகு ஒருவரை மனதளவில் மாற்றுவது கடினம். அதனாலதான் சின்ன வயசுலயே நாம குழந்தைகளைக் கதை படிக்கப் பழக்க வேண்டும். அப்ப அவங்க கற்பனை திறன் அதிகமாகும். கிரியேடிவிட்டி மீது ஆர்வம் வந்தா அவங்க க்ரைம் பக்கம் போக மாட்டாங்க. ஆக நான் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான வேலையைத்தான் பார்க்கிறேன். இதே மாதிரி நான் மயிலாபூரில் டெபுடி கமிஷ்னராக இருந்த போதும் செய்துள்ளேன்” என்கிறார் பாலகிருஷ்ணன்.

“குற்றத்தை தடுக்க அட்வான்ஸ் லெவலில் வேலையைத் தொடங்க வேண்டும். நான் Advance prevention அளவில் முன்கூட்டியே என் வேலை தொடங்கி இருக்கிறேன். அதற்கு சிறு வயதிலேயே குற்றத்தில் ஈடுபடாமல் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும். ஆகவேதான் இந்த லைப்ரரி ஐடியா” என்கிறார்.

பின்தங்கிய பகுதிகளில் உள்ள குழந்தைங்கதான் எங்க டார்க்கெட். அவங்க பள்ளிக்குப் போய் வந்த பிற்பாடு மாலை நேரங்களில் அவர்களை கதைப் புத்தங்களைப் படிக்க வைக்க முயற்சி செய்கிறோம்.

ஏன் இந்த மட்டத்தைக் குறிவைத்து செய்கிறோம்னா, அங்க பெற்றோர்களால்தான் காசு கொடுத்து புத்தகங்கள் வாங்கி பிள்ளைகளுக்குக் கொடுக்க முடியாது. ஆகவே நாங்க வாங்கி இலவசமாக வைக்கிறோம்.

பொதுவா ஒரு அலமாரியில் 200 கதை புத்தகங்கள் வரை இருக்கும். அந்தப் பகுதி நபர் ஒருவரை இதற்குப் பொறுப்பாக வைக்கிறோம். என்ன மாதிரியான புத்தகங்களை வாங்கலாம் என யோசனை தருவதற்கு எழுத்தாளர்கள் குழுவை வைத்துள்ளோம்” என்கிறார். வீதி நூலகம் என்பதால் நூல்கள் காணாமல் போக வாய்ப்பு உள்ளதே எனக் கேட்டால், வேண்டும் என்பவர்கள் எடுத்துக் கொண்டு போகட்டும். புத்தகம் தானே என்கிறார்.

குடிசை பகுதிகளில் வாழும் குழந்தைகள் எல்லோரும் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வாய்ப்பு இல்லை. ஆகவே அவர்களைப் புத்தகம் படிக்க வைப்பதில் கஷ்டம் இருக்காது. டிவியில் மூழ்கிக் கிடக்கும் சிறுவர்களுக்கு மூளையை யோசிக்க வைப்பதற்கான முயற்சிதான் இது” என்கிறார் பாலகிருஷ்ணன். வழக்கமான ஒரு காவல்துறை அதிகாரியாக இல்லாமல் தனித்துவமானவராக வலம் வருகிறார் பாலகிருஷ்ணன். லண்டனில் படித்த அனுபவத்தை வைத்து இந்தியாவையும் லண்டனையும் ஒப்பிட்டு ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதியுள்ளார். இவரது மனைவியும் எழுத்தாளர். பாலகிருஷ்ணன் பிறந்தது கன்னியாகுமரி. இவர்தான் வீட்டிலேயே முதல் தலைமுறை பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.