குழந்தைகள் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடக் கூடாது – பாமக தலைவர் அன்புமணி ட்வீட்..!

குழந்தைகள் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடக் கூடாது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2021-ஆம் ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டை விட 39.80% அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் @NCRBHQ தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது. குழந்தைகள் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடக் கூடாது. ஓராண்டில் குழந்தைகளுக்கு எதிரான 6,064 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 4465 போக்சோ வழக்குகள். 69 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 99.25% பெண் குழந்தைகள்.

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்த புள்ளி விவரங்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. பெண்கள்- குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக கடந்த காலங்களில் பா.ம.க. எழுப்பிய புகார்களை இந்த புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன. பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குவது தான் ஒரு மாநில அரசின் முதன்மைப் பணியாகும். அந்தக் கடமையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.