பவானிசாகர் அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்.!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் குடிநீர் மற்றும் தீவனம் தேடி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை விளாமுண்டி வனப்பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் தொட்டம்பாளையம் கிராமத்தில் புகுந்து துரைசாமி என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின. காலையில் எழுந்து பார்த்த விவசாய துரைசாமி வாழை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சேதம் அடைந்த வாழை மரங்களை பார்வையிட்டனர். காட்டு யானைகள் கிராமத்திற்கு புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்..