தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட்டை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்..!

கோவை துடியலூரை அடுத்த பாலமலை அடிவாரத்தில் உள்ள கதிர்நாயக்கன்பாளையம், லட்சுமி நகரில் புதிதாக வீட்டுமனை பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் ஷெட் அமைத்து தங்கியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை குட்டியுடன் 2 யானைகள் இந்த பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த ஷெட்டை உடைத்து உள்ளே இருந்த உணவுப் பொருள்களை வெளியே இழுத்து தின்றன. இதுகுறித்து பொதுமக்கள் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு வந்த வனத்துறை வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்ட முயன்றனர்.

அப்போது யானைகள் அங்குள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோவில் பின்புறம் உள்ள திருமலா கார்டன் வழியாக ஜல்லிமேடு புதூருக்குள் புகுந்தது. பின்னர் அந்த யானைகள் தேவம்பாளையம் வழியாக காட்டுக்குள் சென்றன. இந்நிலையில் கோவனூரில் உள்ள ரமேஷ் என்பவரின் சோளக்காட்டுக்குள் 3 யானைகள் நேற்று இரவு நுழைந்தது. நீண்டநேரம் அங்கேயே நின்று கொண்டிருந்த யானைகள் மீண்டும் நாயக்கன்பாளையம் நோக்கி நகர்ந்தன.

அப்போது மீண்டும் வேட்டைத் தடுப்புக்காவலர்கள் அவற்றை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். டிசம்பர் மாதம் யானைகள் வலசைக் காலம் என்பதால் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வரும் பிப்ரவரி வரை இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் இருக்கும். எனவே இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்வோர் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.