கோவை சரவணம்பட்டி போலீசாருக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மெகா சூதாட்டம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டில் ஒரு கும்பல் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் பிடிக்க முயற்சி செய்தனர். போலீசார் வருவதை பார்த்தது அந்த கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ரூ.4.86 லட்சத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்து, அவர்கள் சூதாட்டத்திற்கு வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று சரவணம்பட்டி சப் இன்ஸ்பெக்டர் பழனிசாமிக்கு கணபதி பகுதியில் திருட்டுத்தனமாக மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது . இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த ஒரு டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மது விற்பனையில் ஈடுபட்ட நெல்லையை சேர்ந்த கணேசன் (வயது30) என்பவரை பிடித்தனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 138 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்து கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Leave a Reply