என்ன அழகு… எத்தனை அழகு… ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கும் அழகிய மலர்கள்..!

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு மலர் அலங்காரங்கள், கண்காட்சிகள் இடம்பெறுவது வழக்கம். சீசனுக்காக ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் செடிகள் நன்றாக செழித்து வளர்வதற்காக கவாத்து செய்யப்பட்டன. அங்கு 4,201 ரகங்களை சேர்ந்த 31,500 வீரிய ரக ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. செடிகளுக்கு இயற்கையாக உரம் இடுவது, களை எடுப்பது, நோய் தாக்காமல் இருக்க மருந்து தெளிப்பது என பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர். அலங்கார செடிகள் அழகாக வெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளன.
கோடை சீசனை வரவேற்கும் விதமாக தற்போதே பூங்காவில் ரோஜா மலர்கள் பூக்க தொடங்கி உள்ளன. சிவப்பு, மஞ்சள், வெள்ளை உள்பட பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனை நடைபாதையில் நடந்து சென்றபடி சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

இதுகுறித்து பூங்கா நிர்வாகிகள் கூறியதாவது:- ஒவ்வொர் ஆண்டும் பிப்ரவரி மாதம் ரோஜா பூங்காவில் கவாத்து பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்படி கடந்த மாதம் கலெக்டர் முன்னிலையில் கவாத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒருபுறம் அப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனாலும் தற்போது வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையக்கூடாது என்பதற்காக தற்போது பூக்கும் வகையில் 1-வது மற்றும் 5-வது அடுக்கில் மட்டும் நவம்பர் மாதத்திலேயே கவாத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் தற்போது அந்த இரண்டு அடுக்குகளில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. தொடர்ச்சியாக கோடை சீசனுக்கும் பூத்து குலுங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். விசேஷ ரோஜா மலர்கள் மற்றும் நாட்டிலேயே சிறந்த ரோஜா பூங்காவுக்கான விருதினை கடந்த 2006-ம் ஆண்டு ஊட்டி ரோஜா பூங்காவுக்கு உலக ரோஜா சம்மேளனம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.