என்னது எறும்பு உணவா..? கேட்கிறீங்களா… ஆமாங்க… ‘புவிசார் குறியீட்டுக்கு தயாராகும் சிவப்பு எறும்பு சட்னி…!!

எறும்புகளிலேயே சிவப்பு நிற எறும்புகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நறுக்கென்று கடித்து வலி தருவதோடு, கடித்த இடத்தில் சிவப்பாக எழும்பச் செய்துவிடும்.

இந்த எறும்புகளை பார்த்து நாம் ஒதுங்கிக் கொண்டிருக்கும் வேளையில்தான், ஒடிசாவில் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாக சிவப்பு எறும்பு மாறி உள்ளது.

என்ன, எறும்பு உணவா?’ என வியப்பாக இருக்கிறதல்லவா? எறும்பு சட்னி என்று சொன்னால் இன்னும் வியப்பாகிவிடுவீர்கள்தானே?

ஒடிசாவில் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் வருடம் முழுவதும், சிவப்பு ‘வீவர்’ எறும்புகள் (Red Weaver Ants) ஏராளமாகக் காணப்படும். இவை மரங்களின் இலைகளில் கூடு செய்து வாழும்.

மக்களுக்கு இந்த எறும்புகள் தேவைப்படும் பட்சத்தில், எறும்புகளை இலைகளின் கூட்டிலிருந்து பிரிக்க, வாளி நிரம்பு தண்ணீர் வைத்து, அதில் பறிக்கப்பட்ட இலைகளை போட்டு விடுவார்கள். தண்ணீரில் விழுந்ததும் இலைகளையும், எறும்புகளை பிரித்து எடுப்பார்கள். இவற்றில் லார்வா நிலையிலுள்ள எறும்புகளும், பெரிய எறும்புகளும் விரும்பப்படுகிறது.

இந்த எறும்புகளை சமைக்காமல் அப்படியே சிலர் உண்கின்றனர். சில மக்கள், குறிப்பாக பழங்குடியினர் இந்த எறும்போடு இஞ்சி, பூண்டு, மிளகாய், உப்பு போன்ற காரசாரமான பொருள்களைச் சேர்த்து, அரைத்து ‘கை சட்னி (kai chutney)’ தயாரிக்கின்றனர். இதை சந்தைகளிலும் விற்பனை செய்கின்றனர்.

இந்த எறும்பு சட்னி அம்மக்களால் அதிகம் விரும்பப்படக் காரணம், அதில் உள்ள சத்துகள்தானாம். அதிக அளவு புரதம், கால்சியம், ஜிங்க், வைட்டமின் B- 12, இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், காப்பர் மற்றும் 18 வகையான அமினோ அமிலங்கள் இந்த சிறிய எறும்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதை உண்பதால் எதிர்ப்பு சக்தி பெருகி, நோயிலிருந்து காக்கிறது.

இவ்வளவு ஊட்டச்சத்துகள் நிறைந்த எறும்பு சட்னிக்கு, புவிசார் குறியீடு (GI – Geographical Indications) பெற வேண்டி ஒடிசாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இறுதிகட்ட ஆராய்ச்சி, நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். புவிசார் குறியீடு பெற உணவுப் பட்டியலின் கீழ் விண்ணப்பப் பதிவு செய்யப்பட்டுள்ளது எறும்பு சட்னி. அது கிடைத்துவிட்டால், எறும்பு சட்னி தயாரிப்பு தரம் உயர்த்தப்படும், லோக்கல் சந்தையில் அதன் முக்கியத்துவம் உயர்த்தப்படும் என்று ஆர்வமாக உள்ளனர் ஒடிசா ஆராய்ச்சியாளர்களும், மக்களும்.