2 ஆண்டுக்குள் காச நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்- பிரதமர் மோடி சபதம்..!

டலை உருக்குலைய வைத்து, அசந்தால் உயிருக்கே உலை வைக்கும் கொடுமையான நோய் காசம். ஒவ்வொரு ஆண்டும் உலக காச நோய் தினம் மார்ச் 24ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை, முழுவதும் பாதிப்பான நிலை என மூன்று வகைகளாகப் பிரித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நோய் நுரையீரல், சிறுநீரகம், குடல் பகுதிகள், எலும்பு மூட்டுகள் போன்ற உடல் உறுப்புகளைத் தாக்க வல்லது. சில மருந்துகளின் மூலம் இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனாலும், இந்த நோயை முற்றிலுமாகக் குணப்படுத்த இன்னும் சரியான வழிமுறைகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

உலகின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மனிதர்கள் இந்த நோயால் தாக்கப்படுவதாகவும், இதனால் புதியதாக 80 முதல் 90 லட்சம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கொடிய நோயை தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சிகளும், ஏராளமான அமைப்புகளும் காச நோயை சார்ந்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வாரணாசியில் நடைபெற்ற காச நோய் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ‘2025க்குள் இந்தியாவில் காசநோயை முற்றிலுமாக ஒழிப்பதே நமது குறிக்கோள்’ எனத் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் காச நோயை ஒழிக்க 2030ம் ஆண்டு கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய அரசு காச நோயை அழிக்க மும்முரமாக செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 2030க்குள் காச நோய் இல்லாத வாழ்க்கையை உருவாக்குவதாக சபதம் மேற்கொண்டுள்ளனர். ஆனால், இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து 2025க்குள் காச நோய் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.