ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 28,000 கனஅடியாக அதிகரிப்பு : அருவியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை..!

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று காலையில் விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து, மாலையில் 28 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்தது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.

காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, 9.30 மணியளவில் 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும், அருவிகளுக்குச் செல்லும் நடைபாதை, மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் காவிரியில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நேற்று மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து, தண்ணீர் குறைந்தும், அதிகரித்தும் வருவதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்