துப்பாக்கியால் சுட்டுக் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி எழும்பூர் கோர்ட்டில் சரண்..!

கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியபாண்டி. இவர் கடந்த 12-ந் தேதி 5 பேர் கும்பலால் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சத்தியபாண்டி கூலிப்படையாக இருந்து செயல்பட்டு வந்ததும், இவருக்கும், சஞ்சய் என்ற மற்றொரு கூலிப்படையை சேர்ந்தவர்களுக்கும் முன் விரோதம் இருந்தது தெரியவந்தது.
இந்த முன் விரோதத்தில் சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சத்திய பாண்டியை தீர்த்து கட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சஞ்சய், அவரது கூட்டாளிகளான காஜா உசேன் (23) சல்பான் கான் (23) ஆல்வின் (34) சஞ்சய் குமார் (23) ஆகிய 4 பேரும் அரக்கோணம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே சம்பவம் கோவையில் நடைபெற்றதால் இந்த வழக்கு கோவை கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. மேலும் சரண் அடைந்தவர்களை கோவை மத்திய ஜெயிலுக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி சஞ்சய், காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகிய 4 பேரையும் கோவை தனிப்படை போலீசார் வேலூர் சென்று, பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை கோவை மத்திய ஜெயலில் அடைத்தனர்.
இந்த வழக்கில் துப்பாக்கியால் சுட்ட முக்கிய குற்றவாளியான கோவையைச் சேர்ந்த சஞ்சய் ராஜா(30) என்பவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் சஞ்சய் ராஜா எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.