மேகாலயா, நாகாலாந்தில் இன்று ஓட்டுப்பதிவு துவங்கியது..!

ஷில்லாங் : வட கிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று(பிப்.,27) சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது.
மேகாலயாவில் தேர்தல் அதிகாரிகள் ஆபத்தான மலைப்பகுதிகள், ஆறுகளை கடந்து, பல மணிநேர நடை பயணத்துக்கு பின் ஓட்டுச்சாவடிகளை சென்றடைந்தனர்.மேகாலயாவில், முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளில், 59 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. வேட்பாளர் இறந்ததால், ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3,419 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கஉள்ளன.இதில், 640 ஓட்டுச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

323 ஓட்டுச்சாவடிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளன. சவாலானது: மலைப் பிரதேசமான மேகாலயாவில் பல ஓட்டுச்சாவடிகள் கண்காணாத இடங்களில் அமைந்துள்ளன. பல ஓட்டுச்சாவடிகளுக்கு பயணிப்பதே ஆபத்து மிகுந்ததாகவும், சவாலானதாகவும் உள்ளது. மேகாலயா தேர்தல் பணிகளுக்காக மொத்தம், 3,419 தேர்தல் பணிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதில், 974 குழுக்கள் நேற்று முன்தினம் காலையே ஓட்டுச்சாவடியை நோக்கி பயணத்தை துவங்கின.மிகவும் செங்குத்தான மலைப்பாதைகள், ஆறுகள் நிறைந்த கடுமையான மலைப்பாதைகளை கடந்து அவர்கள் ஓட்டுச்சாவடிகளை சென்றடைந்தனர்.

ஒரு சில இடங்களில், கயிறுகளை பிடித்துக் கொண்டு மலைப்பாதையை கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அம்லாரெம் சட்டசபை தொகுதியில் உள்ள கம்சிங் ஓட்டுச்சாவடியில் மொத்தமே, 35 ஓட்டுகள் தான் உள்ளன.இதற்காக, தேர்தல் அதிகாரிகள், அவர்களே படகை ஓட்டிக்கொண்டு ஓட்டுச்சாவடியை சென்றடைந்தனர். தெற்கு காரோ மலைப்பகுதியில் உள்ள ரோங்காரா சிஜூ தொகுதியை சேர்ந்த ரோங்செங் ஓட்டுச்சாவடிக்கு செல்ல, தேர்தல் அதிகாரிகள் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சுமந்தபடி, மலைப்பாதையில் 8 மணி நேரம் நடந்து சென்றனர். மீதமுள்ள 2,445 ஓட்டுச்சாவடிகளுக்கு, தேர்தல் அதிகாரிகள் நேற்று சென்று சேர்ந்தனர். இதற்கிடையே, தெற்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில், வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதியில், எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று சோதனை நடத்தினர்.

இதில் ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போட்டியின்றி தேர்வுமுதல்வர் நெய்பியு ரியோ தலைமையில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் நாகாலாந்து சட்டசபைக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில், 59 இடங்களுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. ஒரு தொகுதியில் பா.ஜ., – எம்.எல்.ஏ., கஸிடோ கினிமி, போட்டியின்றி வெற்றி பெற்றார். காலை 7:00 மணிக்கு துவங்கி மாலை 4:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. மேகாலயா, நாகாலாந்து மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 6 சட்டசபை மற்றும் ஒரு லோக்சபா தொகுதிக்கும் இன்று இடைத் தேர்தல்கள் நடக்கின்றன. மார்ச் 2ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.