காஸாவின் இடிபாடுகளில் இருக்கும் வெடிக்காத குண்டுகள்: அகற்ற 14 ஆண்டுகள் ஆகுமாம் – அதிர்ச்சி தகவல்.!!

காஸாவின் இடிபாடுகளில் இருக்கும் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் தேவைப்படும் என அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இப்போரில் இதுவரை 34,356 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 77,368க்கும் மேற்பட்டோட் காயமடைந்துள்ளனர். இதுவரை 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தியது.

சமீபத்தில் காஸா பகுதியின் 2வது மிகப்பெரிய நகரமான கான் யூனிஸை விட்டு இஸ்ரேல் ராணுவம் வெளியேறியதாக தகவல் வெளியானது. ஆனாலும் போரால் புலம் பெயர்ந்த பாலஸ்தீனர்களின் கடைசி புகலிடமாகத் திகழும் ராஃபாவுக்குள் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கு வசதியாகத்தான் கான் யூனிஸ் நகரிலிருந்து படையினர் வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நடைபெற்ற போரில் சர்வதேச விதிகளால் பயன்படுத்தக் கூடாது என தடைசெய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. பாஸ்பரஸ் குண்டுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படங்கள் இணையத்தில் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இதேபோல இஸ்ரேல் ஃபாலஸ்தீனத்தின் மீது வீசிய பல குண்டுகள் வெடிக்காமல் இருப்பதால் அது அபாயம் மிக்கது என சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஐ.நா. கண்ணிவெடி அகற்றல் நிபுணரான பெஹர் லோதம்மர் தெரிவித்ததாவது. .

‘ பொதுவாக, போரின்போது வீசப்படும் குண்டுகளில் குறைந்தது 10 சதவீதமாவது வெடிக்காமல் போகும். இஸ்ரேல் பாலஸ்தீனப் போரில் இஸ்ரேல் ராணுவம் வீசிய குண்டுகளை கணக்கிட்டால், காஸாவில் இடிபாடுகளில் மறைந்திருக்கும் வெடிக்காத குண்டுகளைக் கண்டறிந்து அதனை முழுமையாக அகற்ற 14 ஆண்டுகள் தேவைப்படும்’ பெஹர் லோதம்மர் தெரிவித்துள்ளார்.