கோவை விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்- ஒருவர் சிக்கினார்.!!

கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 25க்கு மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன .இதன் காரணமாக தினமும் ஏராளமான பயணிகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்கள். இதன் காரணமாக சுங்கவரித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். குறிப்பாக வெளிநாட்டிலிருந்து இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் .இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .இதை அடுத்து நேற்று சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்து இறங்கிய பயனிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் .அதில் ஒரு பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த நபரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள் – அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்தார் .இதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த நபரை தனி அறைக்கு அழைத்துச் சென்று அவர் கொண்டு வந்த பொருட்களை சோதனை செய்தனர். அப்போது அவரது பையில் தங்க கட்டிகள் மற்றும் தங்கச் சங்கிலி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த நபரிடம் இருந்து அவற்றை பறிமுதல் செய்தனர் . அந்த நபரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். அந்த நபரின் பெயர் விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு நேற்று விமானத்தில் வந்தவரிடம் 1 கிலோ 220 கிராம் எடை கொண்ட 10 தங்க கட்டிகள் மற்றும் தங்கச் செயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.90 லட்சத்து 28 ஆயிரம் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.