விஜயகாந்த்-க்கு நேரில் அஞ்சலி: உடைந்து கண் கலங்கிய விஜய்

சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு, நடிகர் விஜய் வியாழக்கிழமை இரவு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு, நடிகர் விஜய் வியாழக்கிழமை இரவு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.28) காலமானார். அவருக்கு வயது 71. விஜயகாந்த் உடல் அவரின் சாலிகிராம இல்லத்துக்கு முதலில் கொண்டுச் செல்லப்பட்டது. அங்கு குடும்ப உறுப்பினர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் கண்ணீர்மல்க  அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் வியாழக்கிழமை இரவு நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது பெட்டியில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலை பார்த்து விஜய் கலங்கினார். பிறகு, பிரேமலதா மற்றும் அவரது மகன்களுக்கு ஆறுதல் கூறினார். விஜய் தன் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில், விஜயகாந்த் உடன் சில படங்களில் நடித்தார். அதன் பிறகு அவரது திரை வாழ்க்கை வெற்றி பெற்றது. இதனை அவரே சொல்லி இருக்கிறார். அதேபோல விஜயகாந்த்தை வைத்து அதிக திரைப்படங்கள் இயக்கிய இயக்குநர்களில் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஒருவர். விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை 6 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு  இன்று மாலை 4:45மணிக்கு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.