2 ‘ஐபோன்’களை உடைத்து கடலில் வீசினேன் – ஜாபர் சாதிக் வாக்குமூலம்.!!

சென்னை: சென்னையை சேர்ந்த, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்,36; போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது கூட்டாளிகள், முகேஷ், 33; முஜிபுர், 34; அசோக்குமார்,34, சதானந்தம், 45 ஆகியோரும் கைதாகி, அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.சமீபத்தில், ஐந்து பேர் மீதும், டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குற்ற பத்திரிகை தாக்கல் செய்தனர்.அதிலுள்ள தகவல்கள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீதான குற்ற பத்திரிகையுடன், வங்கி கணக்குகள் மற்றும் தடயவியல் துறை ஆய்வு முடிவுகள் என, 42 பேரிடம் பெற்ற சாட்சியங்கள், 97 ஆவணங்கள் இணைக்கப்பட்டு உள்ளன.போதை பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த வெளிநாட்டு கரன்சிகளை, ஜாபர் சாதிக், சென்னை பாரிமுனை கடற்கரை ரயில் நிலையம் அருகேயுள்ள மணி எக்சேஞ்ச் நிறுவனம் வாயிலாக மாற்றி உள்ளார். போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு ஐபோன்களை உடைத்து, காமராஜர் சாலையில் நேப்பியர் பாலம் அருகே கடலில் வீசியுள்ளார். ஆஸ்திரேலியா, மலேஷியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு போதை பொருள் கடத்தியது உண்மை என, ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். அதற்கான ‘ஆடியோ மற்றும் வீடியோ’ பதிவுகளும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.