நெல்லை மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு: சமரச முயற்சியில் ஈடுபட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு…

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் பி.எம்.சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 38 பேர்கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில், திமுகவினர் 44 வார்டுகளிலும், அவர்களது கூட்டணிக் கட்சியினர் 7 வார்டுகளிலும் கவுன்சிலர்களாக உள்ளனர். திமுக கவுன்சிலர்கள், கட்சியின் முன்னாள் மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் எம்எல்ஏ மூலம் பதவிக்கு வந்தவர்கள். எனவே, அவர்களில் பெரும்பாலானோர் தற்போதுவரை அவருக்கு விசுவாசமாகவே இருக்கின்றனர். மேயர் சரவணன் பதவிக்கு வந்த பிறகு, அவருக்கும், அப்துல் வகாபுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இவர்களுடைய மோதல் போக்கால் எம்எல்ஏ ஆதரவு திமுக கவுன்சிலர்கள், மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேயர் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தும், வளர்ச்சிப் பணிகளை முறையாக செய்யவில்லை என்று கூறியும் திமுக கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தினர்.

இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்ட, மாவட்ட பொறுப்பு அமைச்சர்தங்கம்தென்னரசு, இரு தரப்பினரிடமும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், பிரச்சினை தீரவில்லை. இந்த விவகாரத்தில் பிரச்சினையைத் தூண்டுவதாகத் தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் பவுல்ராஜ், மன்சூர், ரவீந்தர், கவுன்சிலர் இந்திரா மணியின் கணவர்சுண்ணாம்பு மணி ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். ஆனாலும் பிரச்சினை முடியவில்லை. இதற்கிடையில், மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி, திமுககவுன்சிலர்கள் 38 பேர் கையெழுத்திட்டு, மாநகராட்சி ஆணையர் தாக்கரேவிடம் கடந்த மாதம் கடிதம் கொடுத்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளை (ஜன. 12) நடைபெறும் என்று ஆணையர் அறிவித்துள்ளார். இதனிடையே, திருநெல்வேலிக்கு நேற்று முன்தினம் வந்த அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக கவுன்சிலர்களை அழைத்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட திமுக பொறுப்பாளர்டிபிஎம்.மைதீன்கான், அப்துல்வகாப் எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர். வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும் என்று கவுன்சிலர்களை அமைச்சர் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் கவுன்சிலர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்ததாகவும் தெரிகிறது. மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறினால், அது திமுக அரசுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். அமைச்சரின் சமரசத்தை கவுன்சிலர்கள் ஏற்றுக்கொண்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால், கவுன்சிலர்கள் தரப்பில் எதுவும் தெரிவிக்கவில்லை.