மதுரையில் பெரியப்பா மு.க அழகிரியுடன் உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு ..!

துரை: முன்னாள் மத்திய அமைச்சரும் தனது பெரியப்பாவுமான மு.க அழகிரியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

மதுரையில் உள்ள அழகிரி இல்லம் சென்ற உதயநிதி ஸ்டாலின் சால்வை அணிவித்து ஆசிபெற்றார்.

திமுகவின் தென் மண்டல அமைப்புச்செயலாளராக கடந்த 2009- ஆம் ஆண்டு அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியால் அழகிரி நியமனம் செய்யப்பட்டார்.

திமுகவின் தென் மண்டலங்களில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த மு.க அழகிரி மத்திய அமைச்சராகவும் (2019-2013) இருந்தார்.

இந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு தனது கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக அழகிரியை கட்சி பொறுப்புகளில் இருந்து கருணாநிதி நீக்கினார். கருணாநிதி மறைவுக்குப் பின்னர் மு.க.அழகிரி தி.மு.கவில் இணைவதற்கும், முக்கிய பொறுப்பைப் பெறுவதற்கும் பல முயற்சிகளை மேற்கொண்டார். எனினும், அது நடக்கவில்லை. அழகிரியின் ஆதரவாளர்கள் பலர் தி.மு.கவில் ஓரங்கட்டப்பட்டாலும், தி.மு.கவில் பெரிய குழப்பங்கள் எதையும் ஏற்படுத்தாமல் அழகிரி மவுனம் காத்து வந்தார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஸ்டாலினை நினைத்து பெருமைப்படுவதாக மு.க.அழகிரி தெரிவித்திருந்தார். மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவியேற்ற நிகழ்ச்சியின்போது அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அவரது மகன் தயாநிதி அழகிரி உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்துகொண்டனர். இருவருக்கும் இடையே இருந்த கசப்பு நீங்கிவிட்டதாக கூறப்பட்டாலும் பெரிதாக இருவரும் சந்தித்து கொள்ளவில்லை.

மு.க.அழகிரி தனது தம்பி ஸ்டாலின் மீது கசப்புணர்வில் இருந்தாலும், தி.மு.கவுக்கு சிக்கல் ஏற்படுத்தும் விஷயங்கள் எதையும் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு செய்யவில்லை. முதல்வர் ஸ்டாலினும் பொது மேடைகளில் அவ்வப்போது தனது அண்ணன் அழகிரி பெயரைக் குறிப்பிட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த மாதம் சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தனது அண்ணன் மு.க அழகிரியும் இங்குதான் படித்தார் என அழுத்தி சொன்னதோடு நானும் இங்குதான் படித்தேன் என பழைய நினைவுகளை சுவாரசியமாக பேசியிருந்தார்.

இந்த நிலையில் மதுரையில் நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை சென்றுள்ளார். மதுரை சென்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பாவும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க அழகிரியை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்துப் பேசினார். மு.க அழகிரிக்கு சால்வை அணிவித்து உதயநிதி ஸ்டாலின் ஆசிபெற்றார்.

இதையடுத்து பேட்டி அளித்த மு.க அழகிரி, “உதயநிதி ஸ்டாலின் எனது இல்லத்திற்கு வந்தது எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. உதநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் தொடர்ந்து திமுகவில் செயல்படுவது குறித்து கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும்” என்று பேசினார். முன்னதாக பேட்டி அளித்த மு.க அழகிரி, பெரியாப்பவை காண தம்பி மகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தருகிறார் என்று கூறியிருந்தார்.