தெருவிளக்கு வசதி கேட்டு பழங்குடியின மக்கள் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராமபைலூர் தொட்டி கிராமத்தில் ஊராளி இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பழங்குடி இன கிராமத்தில் வசிக்கும் வீடு இல்லாத 46 குடும்பங்களுக்கு அதே பகுதியில் அரசின் சார்பில் வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டு தமிழக அரசின் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் 46 வீடுகள் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கட்டப்பட்டு பழங்குடியினருக்கு ஒப்படைக்கப்பட்டது. புதியதாக கட்டப்பட்ட 46 வீடுகள் அமைந்துள்ள பகுதியில் தெரு விளக்கு வசதி செய்து தரவில்லை என கூறப்படுகிறது.  இந்நிலையில் புதியதாக கட்டப்பட்ட 46 வீடுகள் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரி ராமபைலூர் தொட்டி பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி மாவட்ட தலைவர் அரவிந்த சாகர் தலைமையில் தெருவிளக்கு செய்து தர கோரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  சுப்பிரமணியன், பிரேம்குமார் ஆகியோரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அப்பகுதியில் ரூ.4.30 இலட்சம் மதிப்பீட்டில் 15 தெருவிளக்குகள் அமைப்பதற்காக நிதி கேட்டு ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக பொதுமக்களிடம் தெரிவித்தனர். இந்த பதிலில் திருப்தி அடையாத பழங்குடியின மக்கள் அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்களிடம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் சிக்கரசம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். புதியதாக கட்டப்பட்ட குடியிருப்பு பகுதியில்  சிக்கரசம்பாளையம் ஊராட்சி பொது நிதியிலிருந்து 5 சோலார் தெரு விளக்குகள் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். மேலும் தெருவிளக்குகள் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாகவும், நிதி வரப்பெற்றபின் உடனடியாக தெருவிளக்குகள் அமைக்கப்படும் எனவும், வீடுகளில் குடியிருப்பவர்கள் தேவைப்படும் பட்சத்தில் தெருவிளக்கு மின் கம்பங்களில் இருந்து மின்வாரியத்தின் மூலம் வீட்டுமின் இணைப்பு பெற்று கொள்ளலாம் என கூறினர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள் கலைந்து சென்றனர்..