நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இதிலும் முக்கியமாக உத்தரப்பிரதேசத்தில் 37 ஆண்டுகளாக எந்த கட்சியினாலும் அரங்கேறாத சாதனையாக பா.ஜ.க இரண்டாவது முறையாக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியமைக்க உள்ளது. பா.ஜ.கவின் இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள பா.ஜ.கவினர் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் பா.ஜ.கவின் வெற்றி கூடத்தில்பேசிய பிரதமர் மோடி உக்ரைன் விவகாரத்தில் இந்தியா ஏன் நடுநிலை வகிக்கிறது என்பதற்கு விளக்கமளித்துள்ளார்.
அப்போது பேசிய மோடி, “போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுடன் பொருளாதார ரீதியாக, பாதுகாப்பு ரீதியாக, கல்வி ரீதியாக, அரசியல் ரீதியாக இந்தியாவுக்குத் தொடர்பு உள்ளது. இந்தியாவின் பல தேவைகள் இந்த நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த போரானது உலகின் அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது. இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது. அனைத்து பிரச்னைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்று இந்திய நம்புகிறது” என பேசினார்.
மேலும் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய மோடி, “சிலர் ஆப்ரேஷன் கங்காவை பிராந்தியமயமாக்க முயன்றனர். மேலும் இந்த மக்கள் ஒவ்வொரு திட்டத்திற்கும் பிராந்தியவாதம் மற்றும் வகுப்புவாதத்தின் வெவ்வேறு நிறத்தைக் கொடுத்துள்ளனர். இது இந்தியாவின் எதிர்காலத்திற்கே மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது” என்று கூறினார்.
Leave a Reply