கோடையில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது தொடர்ந்து முழு கொள்ளளவில் ஆழியார் அணை நீர்மட்டம் தண்ணீர் வீணாவதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை.!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்திற்குட்பட்ட (பி.ஏ.பி), ஆழியார் அணையிலிருந்து, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாய பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அதுபோன்று கேரளாவுக்கும் ஒவ்வொரு ஆண்டும் 7¼ டி.எம்.சி தண்ணீர் அவ்வப்போது திறக்கப்படுகிறது. மேலும், ஆழியாற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் பொள்ளாச்சி, குறிச்சி, குனியமுத்தூர் நகராட்சிகள் மற்றும் வழியோர கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. மொத்தம் 120 அடி கொண்ட ஆழியார் அணையில், சுமார் 3,864 மில்லியன் கன அடி வரை தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதனால், கோடை காலத்தில் கூட ஆழியார் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு தொடர்ந்திருக்கும். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் பி.ஏ.பி திட்டத்தில் உள்ள சோலையார், திருமூர்த்தி, பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளில் தண்ணீர் குறைந்து வறட்சியை சந்திக்கும் போது, ஆழியார் அணையில் மட்டும் ஓரளவு தண்ணீர் தேங்கியிருக்கும்.

இந்த ஆண்டில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கோடை மழைக்கு பிறகு ஜூன் மாதம் முதல் பருவமழை தொடர்ந்து பெய்ததால், ஆழியார் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால், ஆகஸ்டு மாதம் இறுதியில் அணையின் முழு அடியையும் எட்டியது. அதன்பின் வடகிழக்கு பருவமழையும் அவ்வப்போது பெய்ததால், ஆழியார் அணைக்கு பல நாட்களாக நீர்வரத்து அதிகமாக இருந்துள்ளது. இருப்பினும், அணையிலிருந்து பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கு குறிப்பிட அளவிற்கு தண்ணீர் திறப்பு உள்ளது. கடந்த சில நாட்களாக மழைப் பொழிவு குறைவாக இருந்தாலும், நீர்மட்டம் தொடர்ந்து 100 நாட்களுக்கும் மேலாக முழு அடியை எட்டிவாறு கடல் போல் காட்சி அளிக்கிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 119.50 அடியாக உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 180 கன அடியாக இருந்தாலும், 220கன அடி தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்படுகிறது.

தென்மேற்கு பருவம் மழைக்கு பிறகு வடகிழக்கு பருவமழையும் பெய்ததால், ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து சீராக இருப்பதாகவும், இந்த நிலை நீடித்தால் வரும் கோடையின் போது, விவசாய தேவைக்கும், குடி நீர் தேவைக்கும் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்று கூறப்படுகிறது. இருப்பினும், தண்ணீரை வீணாக வெளியேற்றவதை தவிர்த்து, கோடை வறட்சி காலத்தில் தேவைக்கேற்ப தண்ணீரை சேமிப்பதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.