சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து..!

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை ஆசியாவின் மிகப்பெரிய பொது மருத்துவமனையாகும். கடந்த 2005ம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த மருத்துவமனையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். சிகிச்சைக்கு எந்தவிதக் கட்டணமும் இல்லாததால் ஏழை நடுத்தர மக்கள் தனியார் மருத்துவமனையை நாடாமல், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

இங்கு அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை சென்னையில் மிக முக்கிய மருத்துவமனையாக திகழ்கிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் லட்சக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு என்று தனி வார்டு அமைக்கப்பட்டு, அந்த வார்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வார்டில் உள்ள ஒரு அறையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா வார்டில் 5 நோயாளிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர்.

திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தை தொடர்ந்து நோயாளிகள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர். பின்னர் விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, கொரோனா வார்ட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்க போராடினர். இதனைத் தொடர்ந்து அடுத்த அரை மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதிகாலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ராஜீவ் காந்தி மருத்துவமனையின் இரண்டாவது டவரின் பின்புறமுள்ள கல்லீரல் பிரிவில் ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வைக்கும் அறையில் விபத்து ஏற்பட்டது. இதனால் கடந்த 4 மாதங்களில் சென்னையின் மிக முக்கிய அரசு மருத்துவமனையில் இரண்டாவது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது. இதனால் அரசு அதிகாரிகளும், மருத்துவமனை நிர்வாகமும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மக்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.