திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்ப உற்சவம் துவக்கம் – ஆர்ஜித சேவைகள் ரத்து.!!

திருப்பதி: பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை மறுநாள் 20ஆம் தேதியில் இருந்து தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.

திருமலை திருப்பதியில் தெப்ப உற்சவம் நடைபெறும் 5 நாள்களில் சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன. திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் விஐபி தரிசன விதிமுறைகளில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பங்குனி மாத பெளர்ணமி அன்று நடைபெறுவது வழக்கம். சுவாமி புஷ்கரிணியில் ஐந்து நாட்கள் விழாவாக தெப்ப உற்சவ விழா நடைபெறும். தெப்ப உற்சவத்தின் முதல் நாளில் ராமர், சீதை, லட்சுமணர் புஷ்கரிணியில் அமைக்கப்பட்டுள்ள தெப்பத்தில் வலம் வருவார்கள்.

இரண்டாம் நாளில் ஸ்ரீ கிருஷ்ணர், ருக்மணி தேவியும் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் செய்வார். திரியோதசி துவங்கி, பெளர்ணமி வரையிலான மீதமுள்ள 3 நாட்களும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி தெப்பத்தில் வலம் வருவார்கள்.

தெப்ப உற்சவத்தின் முதல் இரண்டு நாட்களில் மூன்று முறையும், மூன்றாவது நாள் முதல் ஐந்து முறையும், கடைசி நாளில் 7 முறையும் உற்சவ மூர்த்திகள் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருவார்கள். இந்த நாளில் பெளர்ணமி நிலவின் அழகுடன் தெப்ப உற்சவ அழகையும் காண ஏராளாமான பக்தர்கள் திருமலைக்கு வருவது வழக்கம்.

மார்ச் 25ஆம் தேதி தும்புரு தீர்த்த முக்கோட்டி, ஸ்ரீ லட்சுமி ஜெயந்தி. ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி பிரம்மோற்சவம். பங்குனி உத்திரம் திருவிழா நடைபெற உள்ளது. இதனிடையே திருமலை ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாதம் வரை விஐபி தரிசன முறையில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல், ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் விஐபி தரிசன விதிமுறைகளில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திலோ அல்லது தங்கும் இடத்திலோ இனி எந்த பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறை பிரிவின் கீழ் வரும் உயரதிகாரிகளுக்கு மட்டுமே அவர்களின் பதவிகளுக்கு ஏற்ப அவர்களுக்குரிய சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஐபிகளே வந்தால் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் ஜுன் மாதம் வரை இந்த நடைமுறைகள் பின்பற்றப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.