புதுடெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நவ.8-ம் தேதி, அப்போது புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். எனினும், இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் சமர்ப்பித்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
எனினும், போதுமான அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படாத காரணத்தால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். பணத்தை மாற்றுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களில் சிலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய் யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.
இதன்படி, நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த மனு, நீதிபதிகள் பி.ஆர்.காவாய், ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோரையும் கொண்ட அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ரிசர்வ் வங்கி சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி மற்றும் மனுதாரர்கள் சார்பில் ப.சிதம்பரம், ஷ்யாம் தவன் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘இந்த வழக்கில் விசாரணை முடிந்தது. தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும்(ஆர்பிஐ) தாக்கல் செய்ய வேண்டும்’ என தெரிவித்தனர். வரும் 10-ம்தேதிக்குள் மனுதாரர்கள் தங்கள் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக நடைபெற்ற விசாரணையின்போது, கருப்பு பணம், கள்ள நோட்டுகள், தீவிரவாதிகளுக்கான நிதியுதவி ஆகியவற்றை தடுக்கவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Leave a Reply