நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழைக்கு ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.
கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் பெய்து வந்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டு உள்ளது. விடிய, விடிய கொட்டி தீர்த்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதுடன், சாலைகளிலும் தண்ணீர் ஆறாக ஓடியது. இன்று காலையும் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்து வருகிறது.
பாலம் உடைந்தது
கூடலூர் பழைய ஆர்.டி.ஓ. அலுவலக சாலையையொட்டி மங்குழி ஆறு ஓடுகிறது. ஆற்றையொட்டி உள்ள பகுதி மக்கள் கடப்பதற்கு வசதியாக அந்த பகுதியில் பாலம் ஒன்று உள்ளது. இதனை மங்குழி பாலம் என்று அழைத்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக மங்குழி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய பெய்த கனமழையால் இன்று காலை மங்குழி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றுப்பாலம் திடீரென உடைந்து கீழே விழுந்தது.
வெள்ளத்தில் சிக்கிய வாலிபர்
அப்போது அந்த வழியாக 45 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் பாலம் உடைந்து விழுந்ததால் ஆற்று வெள்ளத்தில் சிக்கி கொண்டு தத்தளித்தார். சிறிது நேரத்தில் நீந்தி வந்து பாலத்தின் ஒருமுனையில் பிடித்து காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் என அபயகுரல் எழுப்பினார். இந்த சத்தம் கேட்டதும் அந்த பகுதி மக்கள் அனைவரும் அங்கு திரண்டனர். அவர்கள் ஆற்றில் விழுந்து உயிருக்கு போராடியவரை மீட்க முயற்சித்தனர்.
கயிறு கட்டி இழுத்து, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அவரை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பகுதியில் உள்ள பாலம் முழுமையாக இடிந்து ஆற்றில் விழுந்து விட்டதால் அந்த பகுதி முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து பாலத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து அந்த வழியாக வாகனங்கள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டது.
Leave a Reply