கோவை-திருச்சி சாலை திறக்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், இன்று மூன்றாவது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர் பரிதாபமாகப் பலியாகியுள்ளார். இதனால் இந்த பாலத்தில் பயணித்து பலியானவர்கள் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
கோவை-திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ரெயின்போ காலனி முதல் பங்குச்சந்தை கட்டிடம் வரை 3.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.253 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது. அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு வந்த இந்த மேம்பாலம் திமுக ஆட்சி அமைந்ததும் திறக்கப்பட்டது.
இந்த மேம்பாலமானது ஜூன் மாதம் 11ம் தேதி திறக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜி ரிப்பன் வெட்டியும் இந்த பாலத்தை திறந்து வைத்தனர். இந்த பாலம் திறக்கப்படும் போது அதிமுக மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் விழா நடைபெறும் இடத்தில் திரண்டனர்.
இதனால் ஒருவித பரபரப்புடன் பாலம் திறக்கப்பட்டது. பாலம் திறக்கப்பட்ட ஒரு சில தினங்களிலேயே அடுத்தடுத்த இரண்டு விபத்துகள் நடந்தது. இதில் இரண்டு பேர் பரிதாபமாக பலியாகினர். இதில் ஒரு வாலிபர் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததில் பாலத்திலிருந்து கீழே விழுந்து பலியானார்.
இதனைத் தொடர்ந்து எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்படி போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன், மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஜூன் 28ம் தேதி இந்த பாலத்தில் வேகத்தடைகள் அமைக்கும் பணியும், உரிய இடத்தில் பேரி கேட்டுகள் அமைக்கும் பணியும் ஒளிரும் பட்டைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்றன. இதன் காரணமாக பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது.
நீண்ட இழுபறிக்குப் பின் திறக்கப்பட்ட இந்த பாலம் மீண்டும் மூடப்பட்டதால் பொதுமக்கள் கவலையடைந்தனர். இதனிடையே கோவை-திருச்சி ரோடு மேம்பாலத்தில் உக்கடம் பைபாஸ் சாலையில் மேம்பாலத்தின் இயங்குதளம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் எதிர்த்திசையில் வாகனங்களில் செல்லக் கூடாது. பாலத்தில் நேராக செல்லும் சாலையில் 40 கிலோ மீட்டர் வேகத்திலும், வளைவுகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும் என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டது.
மேலும் 3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பலத்தில் 10 இடங்களில் வேக தடைகள் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்ததை அடுத்து மூடப்பட்டு இருந்து பாலம் கடந்த 9ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. பாலம் திறக்கப்பட்டு ஒரு வாரம் கூட நிறைவடையாத நிலையில் மேம்பாலத்தில் மீண்டும் ஒரு விபத்து இன்று காலை நடைபெற்றுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் இருந்து ராமநாதபுரம் நோக்கிச்சென்ற 40 வயது மதிக்கத்தக்க நபர் கோவை -திருச்சி சலை மேம்பாலத்தில் பயணித்தார். அவர் சுங்கம் பகுதி அருகே சென்ற போது, மேம்பாலத்தில் அமைக்கப்பட்ட வேகத்தடையில் ஏறியதில் வாகனம் நிலை தடுமாறியது. இதில் அவர் தூக்கியெறியப்பட்டு பாலத்திலிருந்து கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தொடர்ந்து விபத்துகள் நடப்பது கோவை மக்களை கவலையடைய செய்துள்ளது.
இதனிடையே, கோவை-திருச்சி சாலை மேம்பாலத்திற்காக ரத்த காவு கொடுக்கவில்லை என்பதால் இப்படி விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருவதாக கூறுகின்றனர் சில மக்கள்.
Leave a Reply