கோவை கிணத்துக்கடவு சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி… கிலோ ரூ.16க்கு ஏலம் – விவசாயிகள் ஏமாற்றம்..!

கோவை கிணத்துக்கடவு தினசரி சந்தையில் தக்காளி விலை கடும் சரிவு – கிலோ ரூ.16க்கு ஏலம் போனதால் விவசாயிகள் ஏமாற்றம்

கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் பகுதியில் தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் தக்காளிகளை விவசாயிகள், இந்த தினசரி காய்கறி சந்தைக்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்து வருவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த வாரம் வரை ஒரு கிலோ நாட்டுத்தக்காளி 30 முதல் 35 ரூபாய் வரை ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல் தக்காளியின் விலை மளமளவென சரிந்தது.

இதனிடையே தினசரி காய்கறி சந்தையில் ஒரு கிலோ நாட்டு தக்காளி பத்து ரூபாய் முதல் 16 ரூபாய் வரை மட்டுமே வியாபாரிகள் ஏலம் எடுத்ததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். தீபாவளிக்கு முன்பு பெய்த மழையால் கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதே இந்த விலை சரிவுக்கு காரணம் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.