தொடர்ந்து சரிந்து வரும் சிறுவாணி அணையின் நீர்மட்டம்..!

கடந்த வாரங்களில் பெய்த தொடர் மழையால் அதிகரித்த சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 874 மீட்டராக சரிந்துள்ளது.

கோவை மாநகரில் 26 வார்டுகள் நகரையொட்டியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தீவிரமாகும் தென்மேற்குப் பருவ மழையால், சிறுவாணி அணை முழுக் கொள்ளளவான 878.50 மீட்டர் (49 அடி) நீர்மட்டத்தை எட்டும்.

இந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் 873 மீட்டராக இருந்த அணையின் நீர்மட்டம், ஜூலை முதல் ஆகஸ்ட் வரை பெய்த தென்மேற்குப் பருவ மழையால் 876 மீட்டர் வரை உயர்ந்தது.

இதைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதத்தில் இடைவெளி விட்டு, சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால், அணையின் நீர்மட்டமானது 877 மீட்டராக உயர்ந்தது. இதையடுத்து, அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்பட்ட தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தற்போது மழைப் பொழிவு இல்லாததால் அணையின் நீர் மட்டமானது படிப்படியாகக் குறையத் தொடங்கி உள்ளது. இதனால்,கடந்த வாரங்களில் 876 மீட்டராக இருந்த அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை நிலவரப்படி 874 மீட்டராகக் குறைந்து உள்ளது.

இது தொடர்பாக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்: –

அணையில் போதிய அளவுக்கு குடிநீர் இருப்பு . தற்போது, குறைந்து வரும் நீர்மட்டத்தால் கோவை மாநகரப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாது என்றார்.