காரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வதந்தி பரப்பியவர் கைது..!

கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 13ஆம் தேதி போன் செய்த மர்ம நபர் ஒருவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு காரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதை யடுத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து மேட்டுப்பாளையம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் .இதில் அந்த தகவல் வதந்தி என்பது தெரியவந்தது. இதையடுத்து அழைப்பு வந்த எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த எண் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சாம்சன் என்பவரது என்று தெரியவந்தது . இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர் .இதில் 13ஆம் தேதி தன்னுடைய செல்போனை மேட்டுப்பாளையம் அவுசிங் யூனிட் நகராட்சி அலுவலகம் அருகே வசிக்கும் அறிவுடை நம்பி (வயது 51) என்பவர் வாங்கியதாக தெரிவித்தார் . இதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கார் வைத்துள்ளார். இந்த காரை அவர் சர்புதின் என்பவரிடம் வாடகை முறையில் கொடுத்துள்ளதாக தெரிகிறது .இந்த நிலையில் பிரகாசிடம் அறிவுடை நம்பி ரூ 10 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அறிவுடை நம்பி அந்த பகுதியை சேர்ந்த சாம்சன் என்பவரின் செல்போனை வாங்கி பிரகாஷ் காரில் வெடிகுண்டு இருப்பதாக பொய்யாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வதந்தி பரப்பியதாக அறிவுடை நம்பியை போலீசார் கைது செய்தனர் .பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்..