எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி விவகாரம்- சபாநாயகரை சந்தித்து வலியுறுத்த இபிஎஸ் திட்டம்..!

சென்னை: சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக தமது கோஷ்டியை சேர்ந்த ஆர்பி உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து வலியுறுத்த திட்டமிட்டுள்ளாராம்.

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு கோஷ்டிகள் பிளவுபட்டுள்ளன. இதனையடுத்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிசாமி தரப்பு நீக்கியது. ஓபிஎஸ்-க்கு பதில் ஆர்பி உதயகுமாரை, எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமித்தது.

இது தொடர்பாக தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவுவுக்கு இபிஎஸ் கோஷ்டி கடிதமும் அனுப்பியது. ஆனால் கடந்த சட்டசபை கூட்டத் தொடரின் போது வழக்கம் போலவே, எதிர்க்கட்சித் தலைவரான இபிஎஸ்க்கு அருகேதான் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என ஓபிஎஸ்-க்கும் இருக்கை போடப்பட்டிருந்தது. இதற்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இபிஎஸ் தலைமையில் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் நடப்பாண்டின் முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையின் சிலவற்றை படிக்காமல், சொந்தமாக சிலவற்றை படித்திருந்தார். இது சபை குறிப்பில் இடம்பெறாது முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்தார். இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பு அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் தமிழ்நாடு- தமிழகம் பேச்சு விவகாரத்தில் ஆளும் திமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள், ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டும் பரபரப்பை ஏற்படுத்தினர். இப்படி நடப்பாண்டின் முதல் நாள் கூட்டமே அனல் பறந்தது.

இந்நிலையில் அதிமுக விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தக் கூடும் என தெரிகிறது. எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை அங்கீகரிக்க கோரி, தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவுவை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்து வலியுறுத்த உள்ளனராம். சபாநாயகர் அப்பாவுவின் முடிவைத் தொடர்ந்து அதிமுகவினர் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளக் கூடும்.