2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இயேசு கிறிஸ்துவின் வீடு, அணிந்த ஆடைகளை வழிபடும் மக்கள்..!

யேசு கிறிஸ்து மனித அவதாரத்தில் உலகிற்கு வந்த கடவுளின் மகன் என்றும்
இசுரேல் தேசத்தில் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்றும் பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும்.

இயேசுவின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கை வரலாற்றை பைபிள் மூலம் நாம் அறிய முடிகிறது. இந்த நிலையில் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்னர் படைவீரர்கள் அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பாகம் என எடுத்துக் கொண்டார்கள் என்றும் அங்கியையும் அவர்களே எடுத்துக்கொண்டதாகவும் பைபிள் கூறிகிறது. அந்த அங்கி மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல் நெய்யப்பட்டிருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. சிலுவையில் மரித்து 3ஆம் நாள் உயிர்த்த அவர் விண்ணுலகம் சென்றுவிட்டார், மீண்டும் பூமிக்கு வருவார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை ஆகும்.

 

இயேசு கிறிஸ்து உலகில் வாழ்ந்ததை உறுதி செய்ய பல்வேறு அகழ்வாய்வுப் பணிகள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி நடத்தப்பட்ட அகழாய்வின் மூலமாக கண்டறியப்பட்ட இயேசு கிறிஸ்து அணிந்து இருந்தாகக் கூறப்படும் அங்கி, சமீபத்தில் ஜெர்மன் நாட்டின் டிரியர் நகரில் உள்ள புகழ்பெற்ற புனித பீட்டர் தேவாலயத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது. கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் இந்தப் பழைய அங்கி, 1,500 ஆண்டுகளாக இந்த தேவாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது.

 

இயேசுவின் இந்த நினைவுச் சின்னத்தைப் பொதுமக்கள் அடிக்கடி பார்க்க முடியாது. பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்த ஆடை பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்படுகிறது. அங்கியை பார்க்கவும் வழிபாடு நடத்த, வெயில், மழை, பனி என பார்க்காமல் இந்த தேவாலயத்திற்கு ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். இந்த அங்கி மனிதர்களால் கண்டறியப்பட்ட தொல்லியல் கண்டுபிடிப்புகளில் மிகவும் பழைமையான மத நினைவு சின்னமாக கருதப்படுகிறது.

இந்த தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பழைமையான ஆணி ஒன்றும் இங்கு பல நூறு ஆண்டுகளை கடந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. 1500 ஆண்டுகள் பழமையான, விலை மதிப்பற்ற இந்த மத நினைவுச் சின்னங்கள் உணர்ச்சிபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது இதனை பார்க்க வருபவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

 

இயேசு தன் தாய் தந்தையுடன் வாழ்ந்ததாகக் கூறப்படும் வீட்டை அகழ்வாய்வு செய்யும் பணியில் ஈடுபட்ட, ரீடிங் பல்கலைக்கழக பேராசிரியர் கென் டார்க், இயேசு கிறிஸ்து குழந்தைப் பருவத்தின் போது வாழ்ந்ததாக் கூறப்படும் வீடு முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று கடந்த 2020ஆம் ஆண்டு கண்டறிந்தார். ஆனால் அந்த வீடு இயேசுவும் அவர் குடும்பமும் வாழ்ந்த வீடுதான் என்பதற்கான உறுதியான ஆதாரங்களை திரட்டும் பணியில் தொல்லியலாளர்கள் இன்னமும் ஈடுபட்டு வருகின்றனர்.