வரும் டிச.24ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக நிர்வாகிகள் கூட்டம்..!

திமுகவில் உட்கட்சி தேர்தல் முடிவடைந்த பிறகு சில புதிய அணிகள் உருவாக்கப்பட்டு அதற்கான புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

தற்பொழுது புதிய நிர்வாகிகளின் நியமனம் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கான கூட்டம் விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள திமுக தலைமை கழகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இந்த கூட்டம் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. திமுகவில் உட்கட்சித் தேர்தல் நடைபெற்ற பிறகு அனைத்து அணிகளுக்கும் புதிய தலைவர், செயலாளர், பொருளாளர் நியமிக்கப்பட்டனர். திமுகவை பொருத்தவரை மகளிர் அணி, இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப அணி, மாணவர் அணி என மொத்தம் 23 அணிகள் உள்ளன. இவர்களுக்கான கூட்டம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருந்த நிலையில் இந்த கூட்டம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகளுக்கு மு.க ஸ்டாலின் ஆலோசனை வழங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுக முழு வீச்சில் தயாராகி கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.