தலைமறைவாக இருந்த மோசடி ஆசாமி சிக்கினான்..!

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (57) .இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் குனியமுத்தூர் பகுதியில் உள்ளது. இக்கரை போலுவாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்கிற சிவானந்தம் கடன் வசதி செய்து தருவதாக கூறினார் . நிலத்திற்கு கடன் வாங்கி தருவதாக கூறி சக்திவேல் மற்றும் கனகராஜ் பெயரில் சிவானந்தம் மோசடியாக பதிவு செய்தார். அதன் பிறகு மோசடி குறித்த விபரம் அறிந்த சண்முகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஆனந்த் என்கிற சிவானந்தம் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயி சண்முகம் செல்வபுரம் அடுத்த நொய்யல் பாலத்தில் காரில் சென்று கொண்டு இருந்த போது ஆனந்த் என்கிற சிவானந்தம் மற்றும் சிலர் அவரது காரை வழிமறித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இது குறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து விவசாயி சண்முகத்தை தாக்கியதாக விருதுநகர் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சிவக்குமார், திருப்பூர் மாவட்டம் பெருங்குளத்தைச் சேர்ந்த லட்சுமணன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் .மேலும் தலைமறைவாக இருந்த ஆனந்த் என்கிற சிவானந்தம் அவருடைய மகன் மணிகண்டன் செல்வபுரம் கல்லா மேடு பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

ஆனந்த் என்கிற சிவானந்தம் மீது ஏற்கனவே கோவை ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் துப்பாக்கி வைத்து மிரட்டிய வழக்கும், வாளையார் திருப்பூர் ,குனியமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் நில மோசடி மற்றும் கொலை வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஆனந்த் என்கிற சிவானந்தத்தை செல்வபுரம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.