கனிமவள கொள்ளையை தட்டி கேட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கைது-வானதி சீனிவாசன் கண்டனம்..!

தமிழகத்ததிலிருந்து குறிப்பாக கோவை மாவட்டத்திலிருந்து, அண்டை மாநிலமான கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன.

பொள்ளாச்சி பகுதியில் இருந்து அதிக அளவில் கருங்கற்கள், கேரளத்தின் திருச்சூருக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. குறைந்த அளவு கருங்கல் ஏற்றிச் செல்ல அனுமதி பெற்றுவிட்டு அதிகமான, கருங்கற்கள் கொண்டு செல்லப்படுவதால் தமிழகத்தின் இயற்கை வளங்கள் பறிபோகின்றன.

பொள்ளாச்சியை அடுத்த ஜமீன்முத்தூரில் இருந்து, திருச்சூருக்கு கருங்கற்கள் கொண்டு சென்ற இரண்டு லாரிகளை பொள்ளாச்சி நகர பா.ஜ.க. தலைவர் திரு. பரமகுரு தலைமையில், பா.ஜ.க.வினர், பொள்ளாச்சி காந்தி சிலை பகுதியில் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர்.

தமிழகத்தின் கனிம வளம் சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தட்டிக்கேட்ட திரு. குமரகுரு, திரு. செந்தில், திரு. சபரி ஆகிய பா.ஜ.க.வினர் மீது காவல் துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். கருங்கற்கள் கொண்டுச் செல்லப்பட்ட லாரியை தடுத்து நிறுத்திய பா.ஜ.க. நிர்வாகிகளிடம், “கனிம வள கொள்கையை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கிறோம்” எனக்கூறி சமாதானப்படுத்தி அனுப்பி விட்டு, அதன் பிறகு பொய் வழக்கில் கைது செய்துள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.

கனிம வள கொள்ளையர்களுக்கு ஆதரவாக காவல்துறையினர் நடந்து கொள்வதும், அதனை தட்டிக் கேட்டவர்களை கைது செய்வதும், தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழகத்தில் கனிமவள கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.