போலீஸ் கண்ணில் மண்ணை தூவி தப்பி வந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கைது .. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நெல்லை போலீஸ்..!!

கொலை வழக்கில் கைதான ராக்கெட் ராஜாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பலத்த பாதுகாப்புடன் கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தை சேர்ந்த இளைஞர் சாமிதுரை(26) கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார் இந்த வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திடீர் திருப்பமாக நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா இந்த கொலை வழக்கில் நேற்று திருவனந்தபுரத்தில் வைத்து தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதாவது ராக்கெட் ராஜா தரப்புக்கும் சாமிதுரை தரப்பிற்கும் இடையே ஜாதி ரீதியாக பல ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில் ஏற்கனவே நடைபெற்ற ஒரு கொலையில் பழிக்குப் பழியாக சாமிதுரை கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து ராக்கெட் ராஜாவை பல நாட்களாக காவல்துறையினர. தீவிரமாக தேடி வந்த நிலையில் திருவனந்தபுரத்தில் வைத்து நேற்று அவரை நாங்குநேரி டிஎஸ்பி சதுர்வேதி தலைமையிலான தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர் பின்னர் அவர் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் ராக்கெட் ராஜா நெல்லை அழைத்து வரப்பட்டு நாங்குநேரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிதம்பரம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து, ராக்கெட் ராஜாவை வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் ராக்கெட் ராஜாவை பலத்த பாதுகாப்புடன் கோயம்புத்தூர் சிறைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்து வருகின்றனர். முன்னதாக நாங்குநேரி காவல் நிலையத்தில் வைத்து ராக்கெட் ராஜாவிடம் நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன் விசாரணை மேற்கொண்டார். பாளையங்கோட்டை சிறையில் ஏற்கனவே ஜாதி ரீதியான மோதல் அரங்கேறி வருவதால் ராக்கெட் ராஜாவை இங்கு சிறை வைத்தால் பிரச்சனையாகிவிடும் என கருதி கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார். பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கொலை வழக்கின் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லை தூத்துக்குடி தென்காசி போன்ற தென் மாவட்டங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.