திருக்குறளில் உள்ள ஆன்மீக கருத்துகள் மறைக்கப்பட்டுள்ளன-ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு..!

திருக்குறளில் உள்ள ஆன்மிக கருத்துகள் மறைக்கப்பட்டு, உள்நோக்கத்துடன் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை அண்ணா பல்லைக்கழகத்தில் நடைப்பெற்ற திருக்குறள் மாநாடு 2022ல் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்றவுடன் எனக்கு திருக்குறள் புத்தகம் தான் முதலில் வழங்கப்பட்டது, திருக்குறள் நூல் பக்தியுடன் துவங்கி, ஐந்து புலன்களை எப்படி கட்டுப்படுத்துவது அதன் மூலம் எப்படி ஒருவன் தன் வாழ்நாளில் பிறந்தது முதல் இறப்பு வரை எப்படி வாழ முடியும் என்பது குறித்து பேசுகிறது .

ஆனால் திருக்குறளை வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டுமே கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் கூறி வருகின்றனர். திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேசவில்லை. ஆன்மிகம் தான் இந்தியாவின் ஆணி வேர் என்பதை யாரும் பேசவில்லை.

குறிப்பாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு. போப் வேண்டுமென்றே இதனை மாற்றி மொழி பெயர்த்துள்ளார். ஆதி பகவன் என்றால் முதன்மை கடவுள் என நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஜி.யு.போப் இதற்கான அர்த்தத்தை புரிந்து இருந்தாலும் PRIMAL DEITY என எழுதியுள்ளார்.

திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் பயன்படுத்துகின்றனர். ஆன்மிகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்து இந்த புத்தகம் பேசுகிறது. ஆனால் இந்த புதக்கத்தை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டும் காட்ட நினைக்கின்றனர்.

திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட புதக்கங்களை நான் படித்தேன். ஆனால் திருக்குறளின் உண்மை நிலையை அந்த புதக்கங்கள் பேசவில்லை. எனவே திருக்குறளின் புத்தக்கதை முழுமையாக மொழி பெயர்க்க வேண்டும் என பேசினார்.

ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம், கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குறள் மலை சங்கம் சார்பில் நடந்த உலக திருக்குறள் மாநாட்டில், கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி முதல் குறளில் ஆதிபகவன் என கூறப்பட்டுள்ளது. ரிக் வேதத்தில் இதே போன்ற ஆதிபகவன் குறித்து பேசப்பட்டுள்ளது. திருக்குறளில் ஆன்மிகம் உள்ளது. அரசியல் சித்தாந்தங்களுக்காக அந்தக் கருத்துக்களைப் புறக்கணிக்கக் கூடாது. அது திருக்குறளுக்கு நாம் செய்யும் அநீதி. திருக்குறள் பிறப்பு, இறப்பு, ஆன்மீகம், அரசியல் குறித்தும் பேசுகிறது. ஆராய்ச்சியாளர்கள் மொழிமாற்றம் செய்யும் போது அதன் உள் அர்த்தம் மாறுவதை தவிர்க்க வேண்டும். திருக்குறளின் மகிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.