தமிழ்நாட்டில் 2026 – 2027 கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாள் வரும் ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அரசு அறிவிக்கப்பட்டிருந்தது.இருந்தபோதிலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதாலும், மாநிலத்தின் சில மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரி தாண்டி வெயில் கொளுத்தி வருவதாலும் வழக்கம்போல் பள்ளி திறப்பு தள்ளிப்போகுமா எனும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.இதற்கிடையில் கடந்த 25ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், “பள்ளி திறப்பை 10 நாட்கள் தள்ளி வைத்தால் அதற்கான கூடுதல் வகுப்புகள் எப்போது நடத்தப்படும் என்பது போன்ற சிக்கல்கள் உள்ளன. இருந்தாலும் தற்போதைய தட்ப வெப்பநிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
இருந்தாலும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருவதால் பள்ளிகள் திறக்கப்படுவதை ஒரு வார காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. அதேபோல், “பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த திமுக அரசு பள்ளிகள் திறப்பு தள்ளி வைத்தது. இம்முறையை தற்போதைய அரசும் தொடர வேண்டும்” என பள்ளிக் கல்வித் துறையின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 4ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 4ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.








